வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்.
Published on

கொடைக்கானல்:

கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக ‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலுக்கு கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக கொடைக்கானலில், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்கள் திறக்கப்பட்டன. மேலும் கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத்தலமும் கடந்த 2 நாட்களாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இ-பாஸ் பெற்று ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். நகர் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர். பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை பார்த்து ரசித்தனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை எழில்கொஞ்சும் இடங்களை கண்டுகளித்தனர். தரையிறங்கும் மேககூட்டத்தை கண்டு குதூகலித்தனர். அவ்வப்போது தூறி கொண்டிருந்த சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக, சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள் தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே அவற்றையும் திறந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com