

தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கவும் பல முக்கியச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் திட்டப் பலன்களைச் சிரமமின்றி பெறவும், புதிய நீராதாரங்களை உருவாக்கிக் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் "அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும்.
உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயனாளி பங்களிப்புத் தொகையைக் குறைக்கும் வகையில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில்கள், நிழல் வலைக்குடில்கள், சூரியக்கூடார உலர்த்திகள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களுக்கு 70% மானியம் வழங்கப்படும்.
சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க 80% மானியம் தரப்படும்.
பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில் ஆழ்துளை/குழாய்க்கிணறுகள், மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் 100% முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.
மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து அறுவடை செய்த விளைபொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கவும், தானியங்களை எளிதாக உலர்த்துவதற்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-27ஆம் நிதியாண்டில் ரூ. 10 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில், மொத்தம் 43,500 விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் தார்ப்பாய்கள் வழங்கப்படும்.