

சென்னை:
திட்டமிட்டப்படி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விடாமல் தடுப்போம் என விடுதலை சிறுத்தை, நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு இன்று மாலை போராட்டம் நடத்துகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திரளும் தொண்டர்கள் ஸ்டேடியம் நோக்கி செல்கிறார்கள். தமிழர்களின் உணர்வை மதிக்காமல் நடக்கும் ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்தவும், காவிரி பிரச்சினையில் நயவஞ்சமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் வன்னி அரசு தலைமையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் திரள்கிறார்கள். மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, விடுதலை செழியன், தகடூர் தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, ஆதவன், செல்வம், ரவிசங்கர், அன்பு செல்வம், அம்பேத் வளவன் ஆகியோர் முன்னிலையில் திரண்டு பேரணியாக ஸ்டேடியம் நோக்கி செல்கிறார்கள்.
காவிரி பிரச்சினையில் தத்தளிக்கும் தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதா? என முழக்க கோஷங்களை ஏறெடுத்து செல்கின்றனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் புரட்சிகர மாணவர் முன்னணியினர், மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்களும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
போலீசாரின் கட்டுப்பாடுகள், தடைகளை மீறி போராட்டக்காரர்கள் உள்ளே செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருக்கும் மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகிலும் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் வீரர்கள் புறப்பட்டு வருகின்ற வழியை மறித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் வீரர்கள் தங்கி இருக்கும் பகுதி முதல் சேப்பாக்கம் மைதானம் வரையுள்ள வழியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews