மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் - அரியலூர் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு

மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் - அரியலூர் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 378 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், திருமானூர் கொள்ளிடம் கரையோரம் உள்ள சுள்ளங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு மாட்டு வண்டி மூலம் கொள்ளிட கரையோரம் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்தோம். ஆனால் தற்போது மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் தங்களுக்கு மணல் அள்ளுவதற்கு அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்து மணல் அள்ள அனுமதி அளித்து குடும்பத்தை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com