பாலக்காடு அருகே தமிழக இளம்பெண் படுகொலை- கள்ளக்காதலன் கைது

பாலக்காடு அருகே தகராறில் தமிழக இளம்பெண்ணை கட்டையால் தாக்கி படுகொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கொழிஞ்சாம்பாறை:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் செல்வி (வயது 39). இவர் வேலை தேடி கேரள மாநிலம் திருச்சூர் சென்றார். அங்கு அம்சா (52) என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அம்சாவுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அம்சாவுக்கும் செல்விக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் செல்வியை பாலக்காடு அட்டப்பாடி அருகே உள்ள கற்குடி கிராமத்தில் குடி அமர்த்தினார். அங்கு அம்சா லாட்டரி விற்பனையும், செல்வி 100 நாள் வேலை திட்டத்திலும் வேலை செய்தனர்.

இந்நிலையில் நேற்று கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அம்சா அருகில் கிடந்த கட்டையால் செல்வியின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அப்போது கத்தியை எடுத்து செல்வியின் வயிற்றில் குத்தினார். இதில் செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் செல்வியின் உடலை அங்குள்ள கிணற்றில் வீசிவிட்டு அம்சா தப்பியோடி விட்டார்.

கிணற்றில் செல்வியின் உடல் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அகழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அம்சாவை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் செல்வியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com