

சென்னை:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக 6 வாரம் கெடு விதித்திருந்தது. எனவே, நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்த மத்திய அரசு கடைசி நேரத்தில் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கேட்க முடிவு செய்தது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 3-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தவுள்ளது.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை ஏராளமான இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
காற்றுவாங்க வந்ததுபோல் தனித்தனியாக வந்த மாணவர்கள் கடற்கரை ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றாக திரண்டனர். தங்களது பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த பதாகைகளை உயர்த்தி பிடித்தவாறு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சுமார் பத்து பேருடன் மட்டும் தொடங்கிய இந்த போராட்டம் நேரம் செல்லச்செல்ல ஊடகங்களின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. போராட்டத்தில் குதித்த மாணவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் இனைந்தனர்.
இதன் விளைவாக, கடந்த ஆண்டு நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்போல் காவிரி உரிமை மீட்புக்காக தற்போது மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் போராட்டமும் விரைவில் விஸ்வரூபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெரினா கடற்கரை மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு காவல் அரணாக அவர்கள் இரவுவரை உடன் இருப்பார்களா?, அல்லது, போராட்டக்காரர்களை கலைத்து அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா? என்னும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை மாலை 5 மணியளவில் போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். #tamilnews #studentsprotesing #cauverymanagementboard #marina