சோம்நாத் சாட்டர்ஜி மரணம்- தலைவர்கள் இரங்கல்

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee
சோம்நாத் சாட்டர்ஜி மரணம்- தலைவர்கள் இரங்கல்
Published on

சென்னை:

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளு மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன்விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச் சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்து அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது ஆணித்தரமான திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

சோம்நாத் சாட்டர்ஜி ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர். புகழ்பெற்ற மனித உரிமை போராளி நிர்மல் சந்திர சாட்டர்ஜியின் புதல்வரான சோம்நாத் சாட்டர்ஜி தலைசிறந்த கல்வியாளர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடை பிடித்தவர். மக்களவைத் தலைவராக பணியாற்றிய போது அரசு மாளிகையில் தங்கியிருந்தபோது தமது சொந்த தேவைகளை சொந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டார். அவரது மறைவு இடதுசாரி அரசியலுக்கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வேதனைக்குரியது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எவ்வாறு செயல்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்தர வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், மேற்கு வங்கத்திற்கும் பேரிழப்பு. அது மட்டுமல்ல அவரது இழப்பு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன்:-

மூத்த கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பத்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

சோம்நாத் சாட்டர்ஜி நாட்டில் உள்ள ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நலனுக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர். இந்திய அரசியலில் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SomnathChatterjee

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com