கொள்ளையன் நாதுராமை சென்னை கொண்டுவர நடவடிக்கை - ராஜஸ்தானுக்கு விரைந்தது தனிப்படை

கைது செய்யப்பட்டுள்ள பிரபல கொள்ளையன் நாதுராமை சென்னைக்கு கொண்டுவர தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் விரைந்துள்ளனர்.
கொள்ளையன் நாதுராமை சென்னை கொண்டுவர நடவடிக்கை - ராஜஸ்தானுக்கு விரைந்தது தனிப்படை
Published on

சென்னை:

சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில், சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் நாதுராமை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.

அங்கு கொள்ளையன் நாதுராமை கைது செய்ய முற்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் சென்னை தனிப்படை போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். அப்போது கொள்ளையன் நாதுராம் மீது, இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட குண்டு குறி தவறி இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மீது பாய்ந்துவிட்டது.

இதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையன் நாதுராம் தப்பி ஓடிவிட்டார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி குண்டு குறிதவறி பாய்ந்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் பலியான சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், போலீசார் கையில் சிக்காமல் இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் மாநில போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரை சென்னைக்கு கொண்டு வருவதற்காக சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் ஜெயராம் தலைமையில் தனி போலீஸ் படை அமைத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜெயராம் தலைமையில் இணை கமிஷனர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று காலை விமானத்தில் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். நேற்று மாலை அவர்கள் ராஜஸ்தான் சென்றடைந்தனர்.

கொள்ளையன் நாதுராமையும், அவரது கூட்டாளி சவுத்ரியையும் நாளை இரவு விமானத்தில் தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வருவார்கள் என்று தெரியவந்துள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com