துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு
Published on

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.

மனுதாரர் வாதிடுகையில், ‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என கூறினார். மேலும், தூத்துக்குடி சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதால் உடனடியாக உடல்களை அவர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

அந்த மனு மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். #SterliteProtest  #ThoothukudiShooting #SterliteKillings

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com