பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க காரைக்குடிக்கு நாளை கவர்னர் வருகை

காரைக்குடியில் நாளை அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். இதற்காக கன்னியாகுமரியில் இருந்து இன்று இரவு அவர் மதுரை வருகிறார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க காரைக்குடிக்கு நாளை கவர்னர் வருகை
Published on

மதுரை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாளை (20-ந் தேதி) அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். இதற்காக கன்னியாகுமரியில் இருந்து இன்று இரவு அவர் மதுரை வருகிறார்.

நாளை பிற்பகல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு அவர் சென்னை செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். அப்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபத்தையும் பார்வையிடுகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.

அவரை வரவேற்க கவர்னர் பன்வாரிலால் மீண்டும் மதுரை வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் கவர்னர் சென்னைக்கு செல்லாமல் மதுரையில் 2 நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அப்போது அவர் 21, 22-ந் தேதிகளில் சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஆய்வு மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது.

இதற்காக கவர்னரின் நிகழ்ச்சி நிரல்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று சென்னை சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com