

புதுச்சேரி:
அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சந்துரு (வயது 16). சம்பவத்தன்று இவரும், அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் சிக்கந்தர் (18) என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் கோரிமேடு நோக்கி சென்றனர்.
எல்லைப்பிள்ளைச் சாவடி ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே சென்ற போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த தமிழக அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சந்துருவும், சிக்கந்தரும் அதே இடத்தில் பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி சுபா கடந்த 8.8.2012 அன்று தீர்ப்பு கூறினார். அதில், விபத்தில் மரணம் அடைந்த 2 பேர் குடும்பத்துக்கும் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீட்டு தொகையாக தலா ரூ.12 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.
ஆனால், இந்த இழப்பீட்டு தொகையை தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் வழங்கவில்லை.
இதையடுத்து பலியான சந்துருவின் தாய் சுமதி, சிக்கந்தரின் தாய் சம்சுனிசா பேகம் ஆகியோர் மீண்டும் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இழப்பீடு வழங்காத தமிழக அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி சுபா உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை விழுப்புரம் அரசு பணிமனையில் இருந்து புதுவை நோக்கி வந்த 2 தமிழக அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
பின்னர் அந்த பஸ்களை புதுவை கோர்ட்டு வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் ரவி ஆஜரானார்.