முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை: இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி 15-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை: இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
Published on

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்படும். அந்த வகையில், 12-வது ஊதிய ஒப்பந்தம் 21.8.2016 அன்று முடி வடைந்தது. இதையடுத்து 1.9.2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்த தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 2-வது கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி மையத்தில் கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. இதில், உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டப்படி வருகிற 15-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

இதையடுத்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த 8-ந்தேதியும், 4-வது கட்ட பேச்சுவார்தை கடந்த 11-ந்தேதியும் சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் சுமுக உடன்பாடு ஏற்படாததால் அந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமுகமாக பேசி தீர்க்கவும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று 5-வது கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாஷ்மின் பேகம், போக்குவரத்துக்கழக நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கியது. போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை தனித்தனியாகவும், ஒரு சேர வைத்தும் யாஷ்மின் பேகம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படாததால் 3 மணி நேரத்துக்கு பின்னர் 3.30 மணி அளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மாலை 6 மணிக்கு யாஷ்மின் பேகம் தலைமையில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. 6.30 மணி வரையிலும் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இதிலும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று யாஷ்மின் பேகம் அறிவித்தார்.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், “முத்தரப்பு பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு தரப்பில் இருந்து உரிய பதில் வரும் வரையில் சமரசத்துக்கு செல்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம். திட்டமிட்டப்படி 15-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். நாளை (இன்று) மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதற்கிடையே வேலை நிறுத்த போராட்டம் குறித்து விளக்கும் வகையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்த நிர்வாகிகள் சென்னை தியாகராயநகரில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். மேலும் தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தரும்படியும் வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இதற்கிடையே மே 2015 வரை ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி ஆகியவை உடனடியாக வழங்க சுமார் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com