

சென்னை:
அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் 60 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு குளங்கள் நிரப்பப்பட்டு சுமார் 50 லட்சம் மக்கள் பயனடைவர் என கூறப்படுகிறது.
எனினும், நீண்ட காலமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நிர்வாக ரீதியில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படாததால், அத்திக்கடவு போராட்டக் குழுவினர், திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து தற்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் குழாய் அமைத்தல், மின் இணைப்பு, பம்பிங், 5 ஆண்டுகளுக்கு தொடர் பாரமரிப்பு பணி மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்காக ரூ. 1,652 கோடி செலவிட, தமிழக அரசு நிர்வாக அனுமதியை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNadu