பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு

மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதித்துறை மந்திரியை பாராட்டுகிறேன்.

உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை வரவேற்கிறேன்.

நாட்டில் நீர்ப்பற்றாக்குறை அதிகமாக நிலவக்கூடிய 100 மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்ப்பற்றாக்குறை நிலவும் அனைத்து மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டு, அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு தரிசாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச்சம்பவங்களைக் குறைப்பதிலும் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க வேண்டும்.

ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மூலமாக செயலாக்கப்பட இருக்கும் கிசான் ரெயில் மற்றும் கிரிஷி உடான் திட்டங்கள் மூலம் தடையில்லா தேசிய குளிர்பதன முறை நிறுவப்பட இருப்பதையும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதையும் பாராட்டுகிறேன்.

ஆதிச்சநல்லூர் உள்பட 5 தொல்லியல் சார்ந்த இடங்களில் அருங்காட்சியகம் கொண்ட மேம்பாட்டு பணிகள் செய்வதாக அறிவித்துள்ளதை தமிழக மக்களின் சார்பாகவும் மத்திய அரசுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதியதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் திறம்பட தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com