

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசனின் சிறந்த தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவித்த செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
அதே போன்று, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் சிறந்த சமூக சேவையினை அங்கீகரித்து அவருக்கும் மத்திய அரசு உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
கலைத்துறையில் சிறந்து விளங்கும் கர்நாடக இசைப் பாடகர்கள் லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, சென்னை ஆகிய பெரும் நகரங்களின் வரலாற்று, சமூக மற்றும் கலாச்சார அடையாளங்களின் ஓவியங்களை சிறப்புற தீட்டும் மனோகர் தேவதாஸ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணனின் சமூக சேவையினை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாதஸ்வர இசையால் அனைவரின் உள்ளங்களை கவர்ந்து வரும் காலீ ஷாபி மெகபூப் மற்றும் ஷேக் மெகபூப் சுபானி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் பிரதீப் தரப்பில், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுபெறும் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் மென்மேலும் பல விருதுகளை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.