ஆசிய நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு - பரிசுத்தொகை அறிவிப்பு

ஆசிய நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
ஆசிய நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு - பரிசுத்தொகை அறிவிப்பு
Published on

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் 8.9.2017 முதல் 16.9.2017 வரை நடைபெற்ற 9வது ஆசிய வயதுப் பிரிவினருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் 2017-ல் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பி. விக்காஸ், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வி. லெனார்ட் மற்றும் சென்னையைச் சேர்ந்த சு. தனுஷ் ஆகிய மூன்று மாணவர்கள் நீச்சல் பிரிவில் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அளவில் பெருமையை சேர்த்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.  

9வது ஆசிய வயதுப் பிரிவினருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் 2017-ல் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த 5 நீச்சல் வீரர்கள் உட்பட 38 நீச்சல் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டதில் தமிழகத்தைச் சேர்ந்த பி. விக்காஸ் நான்கு பிரிவுகளில் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 4 பதக்கங்களும், வி. லெனார்ட் 1 தங்கப் பதக்கமும் மற்றும் சு. தனுஷ் 1 வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.  

பதக்கங்கள் வென்ற நீச்சல் வீரர்களைப் பாராட்டி அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிய ஊக்கப்படுத்திடும் வகையில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4.00 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.50 லட்சம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1.50 லட்சம் என்ற அளவில் உயரிய ஊக்கத் தொகை வழங்கவும், இந்த நீச்சல் வீரர்களுக்கு பயிற்சியளித்த பயிற்றுநர்களுக்கு, வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஊக்கத் தொகையில் 15 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கவும் ஆணையிட்டுள்ளேன்.  

இதன்படி, 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற பி. விக்காஸ் என்பவருக்கு ரூ.9.50 லட்சம், 1 தங்கம் வென்ற வி. லெனார்ட் என்பவருக்கு ரூ.4.00 லட்சம் மற்றும் 1 வெள்ளி வென்ற சு. தனுஷ் என்பவருக்கு ரூ.2.50 லட்சம் என மொத்தம் ரூ.16.00 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கவும், இவர்களின் பயிற்சியாளர்கள் ஏ.சரோஜினி தேவி என்பவருக்கு ரூ.1,42,500/-, ஏ. கர்ணன் என்பவருக்கு ரூ.60,000/- மற்றும் வி.வீரபத்ரன் என்பவருக்கு ரூ.37,500/- என மொத்தம் ரூ.2.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.  

பதக்கங்கள் வென்ற நீச்சல் வீரர்களுக்கும் அவர்களது பயிற்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் எதிர்காலத்தில் மென்மேலும் பல சாதனைகள் புரிந்து இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள் சேர்த்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com