

தமிழக சட்டசபையில் இன்று 2018-2019 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2018-19ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சுகாதாரத் துறைக்காக 11,638.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் உயர்நிலை மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, போதிய மனிதவளங்களை அரசு தொடர்ந்து அளித்து வருவதன் விளைவாக, மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளால், மாநிலத்தின் முக்கிய மருத்துவக் குறியீடுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. மாநிலத்தில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்” கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 12,000 ரூபாய் நிதியுதவியை 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
பெண்களுக்கு பரவலாக உள்ள இரத்த சோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் இத்திட்ட நிதியில் 4,000 ரூபாய் மதிப்புள்ள இரும்புச்சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய ‘அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்’ வழங்கப்படும். 2018-2019ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இந்த முன்னோடித் திட்டத்திற்காக 1,001.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்’ ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ போன்ற திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.