

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ஸ்வேதா (வயது 19) என்ற மாணவி, எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கி படிக்கிறார்.
இந்த நிலையில், மாணவி ஸ்வேதா சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு சக மாணவிகளுடன் ஸ்வேதா உணவு சாப்பிட்டு விட்டு வெகு சீக்கிரமாக தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.
விடுதி அறைக்குள் மற்ற மாணவிகள் வருவதற்குள் தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அறைக்கு வந்த சக மாணவிகள், ஸ்வேதா மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவரது அருகில் தூக்க மாத்திரை இருந்த பாட்டில் கிடந்தது. இதையடுத்து, ஸ்வேதாவை மீட்டு அரசு மருத்துவமனையிலேயே அனுமதித்தனர்.
மாணவியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரை காப்பற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
மாணவி ஸ்வேதா தற்கொலை முயற்சிக்கு, குடும்ப பிரச்சனை அல்லது படிப்பதில் ஏற்பட்ட சிரமம் போன்ற 2 காரணங்கள் கூறப்படுகிறது.
இதேபோல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் விஜயலட்சுமி (24) என்ற மாணவி, லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். இவர், வயிற்று வலி காரணமாக கல்லூரி விடுதியிலேயே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் அந்த மாணவியும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும், திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.