

திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தொழிலாளி ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ரத்த காயத்துடன் கிடந்தவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் இறந்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் கிடந்தது. இதனால் அவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர் தஞ்சாவூரை சேர்ந்த பாஸ்கரன் (வயது 55) என்பதும், சமையல் தொழிலாளி என்பதும், கடந்த 1 வருடமாக திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் தங்கியிருந்து தினமும் கிடைக்கும் சமையல் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. அவருடைய முழுமுகவரி உள்ளிட்டவை உடனடியாக தெரியவில்லை.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பாஸ்கரனுடன் சமையல் செய்து வந்த நண்பரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சக்திவேல்(52) என்பவர் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் மதுபோதையில் இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், பெரிய கல்லை எடுத்து பாஸ்கரனின் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் பாஸ்கரன் கிடந்த போது போலீசார் மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சக்திவேலை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.