கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி கற்பழிக்க முயற்சி- திருப்பூர் தொழில் அதிபர் கைது

கோவையில் பகுதிநேரமாக வேலை பார்த்த கல்லூரி மாணவியை கடத்தி கற்பழிக்க முயன்ற திருப்பூர் தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த மங்கலம் இச்சிபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி சரவணகுமார்(வயது 34). தொழில் அதிபரான இவர் அந்த பகுதியில் பிரிண்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் சோமனூர் பகுதியில் பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனமும் வைத்துள்ளார். இங்கு சோமனூர் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பகுதி நேரமாக வேலைபார்த்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை 8 மணியளவில் தனது மகளை தொடர்பு கொண்டார்.

அப்போது மாணவி தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவதாகவும் கூறினார். ஆனாலும் அவர் இரவு வெகு நேரத்தை தாண்டியும் வரவில்லை.

இதையடுத்து மாணவியின் தந்தை மீண்டும் போன் செய்தார். அப்போது மாணவி போனை எடுக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை தனது மகள் வேலை செய்யும் நிறுவனத்துக்கு சென்று பார்த்தார்.

அப்போது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகளை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இரவு 10.30 மணியளவில் மாணவியை ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரது வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது மாணவியின் உடைகள் கிழிந்து அவர் ரத்த காயத்தில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர் தனது மகளிடம் என்ன நடந்தது என்று கேட்டனர்.

நான் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினேன். அப்போது கம்பெனி நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணி சரவணகுமார் காரில் அழைத்து சென்று வீட்டில் விடுவதாக கூறினார்.

நானும் அதனை நம்பி அவருடன் காரில் சென்றேன். ஆனால் அவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு வைத்து எனக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியான நான் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவந்தேன். ஆனாலும் அவர் என்னை விடாமல் காரில் துரத்தி வந்தார். பயத்தில் ஓடிய நான் பள்ளத்தில் மறைவதற்காக குதித்த போது முட்புதரில் சிக்கி கொண்டேன். என்னை தேடி பார்த்த அவர் நான் இல்லை என்று நினைத்து திரும்பி சென்று விட்டார்.

இதையடுத்து நான் முட்புதரில் இருந்து வெளியே வந்து சாலையில் நின்று அழுதேன். இதை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் பார்த்து என்னை வீட்டிற்கு அழைத்து வந்தார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com