

திருப்பூர்:
திருப்பூர் அடுத்த சாமளாபுரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் போலீசார் வந்தனர். திடீரென போலீசார் போராட்டம் நடத்திய பெண்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஒரு பெண்ணின் கன்னத்தில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் அறைந்தார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து பெண் மீது தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார். ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், மற்றும் அப்பகுதி பெண்களிடமும் அவர் விசாரித்தார்.
பின்னர் விசாரணை அறிக்கையை அவர் கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இதனால் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாமளாபுரம் பகுதி மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் பாண்டிய ராஜனுக்கு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதனால் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க போராடிய சாமளாபுரம் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.