

திருப்பூர்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. அந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. முககவசம் அணியாமல் வெளியில் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முககவசத்தின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முக கவசம் ரூ.10 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. பல்வேறு விதமான வடிவங்களிலும் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏழை- எளிய மக்கள் விலை உயர்ந்த முககவசங்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஏழை- எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் முககவசம் வழங்க திருப்பூர் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது
எனவே திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக முககவச தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று தொடங்கி வைத்தார். மாநகர் நல அதிகாரி பூபதி உள்பட பலர் பங்கேற்றனர். ரூ.1 நாணயத்தை இந்த எந்திரத்தில் செலுத்தினால் ஒரு முககவசம் கிடைக்கும். இந்த முககவசம் ரூ.13 மதிப்புடையது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு தானியங்கி எந்திரம் மூலமாக முககவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, “அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.1 நாணயத்தை செலுத்தி ஒரு முககவசத்தை பெறும் தானியங்கி எந்திரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரமான முககவசத்தை ரூ.1-க்கு வழங்குகிறோம். இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற முககவச தானியங்கி எந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.