நெல்லை வண்ணார்பேட்டையில் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி

நெல்லை வண்ணார்பேட்டையில் மதுகுடிக்க பணம் தராததால் மனைவியை தொழிலாளி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை வண்ணார்பேட்டையில் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி
Published on

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்தவர் காந்திமதி நாதன் (வயது 35). இவர் காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள் (30). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஈஸ்வரி (7) என்ற மகளும், வெற்றிவேல் (5) என்ற மகனும் உள்ளனர்.

காந்திமதி நாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம். நேற்று மதியமும் வழக்கம்போல் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர், பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காந்திமதி நாதன், இசக்கியம்மாளை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் இசக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் காந்திமதி நாதன் கதவை சாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்து பாளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள காந்திமதி நாதனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்நிலையில் காந்திமதிநாதனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், மகேஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் காந்திமதிநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கோவை, திருப்பூர் பகுதிக்கு காந்திமதிநாதன் தப்பி சென்றிருக்கலாம் என போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com