நெல்லை பேராசிரியர் கொலை வழக்கு- தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜா கைது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜாவை போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர்.
நெல்லை பேராசிரியர் கொலை வழக்கு- தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜா கைது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரபலமான இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் இன்று காலை 9 மணி அளவில் சுற்றி வளைத்தனர். இவர்கள் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டல் சென்னையில் பிரபலமான ஓட்டலாகும். இதனால் போலீசார் மாறுவேடத்தில் சென்று ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறைக்குள் அதிரடியாக புகுந்தனர்.

ராக்கெட் ராஜாவையும், அவரது கூட்டாளிகள் 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அனைவரும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வைத்து ராக்கெட் ராஜா உள்ளிட்ட 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் ஏதேனும் சதி திட்டத்துடன் ராக்கெட் ராஜா பதுங்கி இருந்தாரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரை கொலை செய்யும் நோக்கத்தில் ராக்கெட் ராஜா செயல்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் போலீசார் இதனை உறுதி படுத்தவில்லை.

ராக்கெட் ராஜாவிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராக்கெட் ராஜாவுடன் நெல்லை வடக்கு பால பாக்கியம் நகரை சேர்ந்த சுந்தர், பிரகாஷ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி திருநகரை சேர்ந்த ராஜ்சுந்தர், தூத்துக்குடி நடுபட்டு வடக்கு தெருவைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோரும் பிடிபட்டனர்.

ராக்கெட் ராஜா கடந்த 2 மாதங்களாக கொலை வழக்கு ஒன்றில் நெல்லை போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

அந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் குமார் (50). புதிய தமிழகம் கட்சியில் இருந்த இவர் தற்போது அ.தி.மு.க.வில் உள்ளார்.

இவர் பாளையங்கோட்டையில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பாளை வி.எம்.சத்திரத்தில் உள்ள ஒரு ஏக்கர் இடம் தொடர்பாக இவருக்கும் டாக்டர் பாலமுருகன் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது.

இதையடுத்து எதிர் தரப்பினர் குமாரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி பாளை அண்ணா நகரில் உள்ள குமார் வீட்டில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குமாரின் மருமகனான, நெல்லை பொறியியல் கல்லூரி பேராசிரியரான செந்தில்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொடியன்குளம் குமார் உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் ராக்கெட் ராஜாவுடன், அவரது சகோதரர் வக்கீல் பாலகணேசன், டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com