திருமங்கலத்தில் ரூ. 7¼ கோடியில் அரசு கலைக்கல்லூரி: எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

மதுரை அருகே கப்பலூரில் திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதியம் திறந்து வைக்கிறார்.
திருமங்கலத்தில் ரூ. 7¼ கோடியில் அரசு கலைக்கல்லூரி: எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்
Published on

மதுரை:

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிலா தமிழக சட்டமன்றத்தில் 110 -வது விதியின் கீழ் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து மதுரை மாவட்டம், கப்பலூரில் ரூ. 7.25 கோடி செலவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரி திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகிறார். அவருக்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது.

இதையடுத்து மதுரை அருகே உள்ள கப்பலூரில் புதிய அரசு கலைக் கல்லூரியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பேசுகிறார். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

விழாவிற்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

கலெக்டர் வீரராகவராவ், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை ஆகியோர் வரவேற்றுப் பேசுகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன், எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் விழாவில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு கலைக்கல்லூரியை திறந்து வைத்த பின்னர் எடப்பாடி பழனிசாமி காரில் தூத்துக்குடி புறப்பட்டுச் செல்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com