

திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். சில பக்தர்கள் காணிக்கையாக தங்களுடைய நிலங்களை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான சொத்துக்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உள்ளது. அதில் சில நிலங்கள் தேவஸ்தானத்தால் பாதுகாக்க முடியாமல் இருப்பதாகவும் அந்த நிலங்களை பலர் அபகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சில நிலங்களை குறிப்பாக தமிழகத்தில் உள்ள 23 சொத்துக்களை ஏலமிட்டு விற்பனை செய்ய தேவஸ் தானம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 23 விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளை விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விற்பனை செய்யப்படவுள்ள நிலங்களின் அளவு மற்றும் விலை நிர்ணயம் குறித்து தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த நிலங்கள் விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு தமிழக பக்தர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பதியில் ஜனசேனா கட்சியின் மண்டல தலைவர் கிரண்ராயல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஆந்திர மாநில அரசுடன் திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தை இணைக்க திட்டமிட்டு இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.