திண்டிவனம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்

திண்டிவனம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்திய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Published on

திண்டிவனம்:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வடம்பூண்டியில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதையடுத்து வடம் பூண்டி அடுத்துள்ள கொடியம் கிராம எல்லையில் உள்ள ஒரு கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி புதிய கடையை திறப்பதற்கு லாரி மூலம் மதுபாட்டில்களை ஊழியர்கள் கொண்டு வந்தனர்.

டாஸ்மாக் கடை கட்டிடத்தின் உள்ளே கொண்டு சென்று மதுப்பாட்டில்களை வைத்தனர். இதையறிந்த கொடியம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் புதிதாக திறக்கப்பட இருக்கும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த வெள்ளிமேடு பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரிடம் இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடினர். அங்கு இறக்கி வைத்த மதுபாட்டில்களை மீண்டும் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com