

சென்னை:
சென்னை திருவேற்காடு தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. நர்சிங் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியில் இருந்தார்.
இரவில் நோயாளிகள் யாரும் இல்லாததால் அருகில் இருந்த அறைக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 3 பேர் பவித்ரா அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளனர். அவர் கூச்சல் போடவே அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பவித்ரா அறையில் இருந்த அவரது பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து பவித்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி சரத்குமார், சசி குமார், அபினேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் சசிகுமார் அந்த ஆஸ்பத்திரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டன.
கே.கே.நகர் சிவன் பூங்கா அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார், விக்னேஷ் என்பதும் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
2 பேரையும் போலீசார் கைது செய்து 16 பவுன் நகை, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான தினேஷ்குமார், பிரபல ரவுடி சிபிமணியின் நெருங்கிய கூட்டாளி ஆவார். தினேஷ்குமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சமீபத்தில் வெளியே வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews