கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கேரள வாலிபர் உள்பட 3 பேர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கேரள வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

கணபதி:

கோவையை அடுத்த கணபதி சின்னவேடம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த யமஹா ரவி(வயது 56) மற்றும் அவருடன் இருந்த கேரளாவை சேர்ந்த பிரஜித்(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 3.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கோவை பீளமேடு வி.கே.ரோடு சுடுகாடு அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜோதி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடீரென ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு வரிடம் நடத்தி விசாரணை யில் அவர் பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே-அவுட் பகுதியை சேர்ந்த வீரன் என்ற நல்லிவீரன்(29) என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நல்லிவீரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இரு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com