தொப்பூர் அருகே வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி - டிரைவர் உள்பட 3 பேர் காயம்

தொப்பூர் அருகே வேன் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நல்லம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து பழுதடைந்த கார் ஒன்றை கயிறு கட்டி, வேன் மூலம் சேலத்திற்கு நேற்று முன்தினம் இழுத்து வந்தனர். இந்த வேனை காவேரிப்பட்டணத்தை சேர்ந்த டிரைவர் இர்பான் (வயது 22) என்பவர் ஓட்டி சென்றார். வேனில் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கவுதம் (22), ரூமன் (21), முகமது (21) ஆகியோர் உடன் வந்தனர்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தொம்பரகாம்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளி கவுதம் படுகாயம் அடைந்தார். டிரைவர் இர்பான் மற்றும் தொழிலாளர்கள் ரூமன், முகமது ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று இர்பான் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தொழிலாளி கவுதம் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து காயம் அடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com