

தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தங்கம் (வயது 55). இவரை நன்கு அறிந்த தூத்துக்குடி ராஜபாளையத்தை சேர்ந்த மரியதாஸ் (49), கதிர்வேல்நகரை சேர்ந்த முருகன் (47) ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது தங்கத்திடம், சிவகங்கை மாவட்டம் கண்டனூரை சேர்ந்த வைத்தியலிங்கம் (60), முதுகுளத்தூரை சேர்ந்த முத்துராமலிங்கம் (45) ஆகியோர் இரிடியம் என்ற மதிப்புமிக்க பொருள் இருப்பதாகவும், அதனை விற்று கொடுத்தால் நல்ல கமிஷன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கத்தை மரியதாஸ், முருகன் ஆகியோர் அழைத்து உள்ளனர். அங்கு வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரும் இருந்தனர். அவர்களிடம் தங்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
பின்னர் இரிடியத்தை காண்பிக்குமாறு தங்கம் கூறினார். அப்போது ஒரு பெட்டியில் 6 பிளாஸ்டிக் டப்பாக்கள் இருந்தன. அதன் நடுவே பேட்டரி பொருத்தப்பட்டு இருபுறமும் ரப்பர் கார்க் கொண்டு அடைக்கப்பட்டு இருந்தது. பேட்டரியை சுற்றி திரவம் நிரப்பப்பட்டு இருந்தது. இதனை பார்த்த தங்கம் திரவ நிலையில் இரிடியம் இருந்ததால் சந்தேகம் அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 4 பேரும் சேர்ந்து தங்கத்தை மிரட்டினர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார், வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம், மரியதாஸ், முருகன் ஆகிய 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு இருந்த 144 மில்லி திரவ நிலையிலான இரிடியம் போன்ற பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கம் அ.ம.மு.க. பிரமுகர் ஆவார். கைப்பற்றப்பட்ட இரிடியத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.