

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரது மகன் பிரபாகரன் (வயது 35). மீனவரான இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பொன்னரசி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைய பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பொன்னரசி சமீபத்தில் கணவருடன் கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பிரபாகரன் தனது தாய்-தந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கடலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பிரபாகரனுக்கும் அவரது தாயாருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் உள்ள டி.வி., பீரோ உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார். அப்போது அங்கு வந்த ராஜபாண்டி மகனை கண்டித்தார்.
இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ராஜபாண்டி அருகே கிடந்த மீன் வலை தைக்கும் ஊசியால் பிரபாகரனை சரமாரியாக மார்பு பகுதியில் குத்தினார். இதில் சரிந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் ராஜபாண்டி புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று, எனது மகன் தவறி கீழே விழுந்ததில் இறந்து விட்டார் என கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரபாகரன் குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து புதுக்கோட்டை போலீசார் ராஜபாண்டியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ராஜபாண்டி, மகனை ஊசியால் குத்திக்கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.