

பிஜப்பூர்:
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வீதம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் ‘ஆயுஷ்மமான் பாரத்’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 2022-ம் ஆண்டுக்குள் ஒன்றரை லட்சம் நலவாழ்வு மையங்கள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில், ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் முதுமை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
அதன்படி, மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், முதலாவது நலவாழ்வு மைய திறப்பு விழா, சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் ஜங்கலாவில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, அதை திறந்து வைத்தார்.
மேலும், 40 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இணையதள கேபிள் அமைக்கும் திட்டம், புதிய ரெயில் பாதை, புதிய பயணிகள் ரெயில், வங்கிக்கிளைகள், ரூ.1,700 கோடி மதிப்பிலான சாலை, பால திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவற்றையும் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-
அம்பேத்கரால்தான், ஏழைகளும், பின்தங்கியவர்களும் தங்கள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர். சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவில், ஏழைத்தாயின் மகனாக நான் பிறந்தேன். நான் பிரதமர் ஆனதற்கு அம்பேத்கரே காரணம். அவர் அரசியல் சட்டத்தை அளித்தார். உங்கள் உரிமைகளை பாதுகாத்தார். உங்கள் உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, ஆயுதங்களை எடுத்து, உங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளாதீர்கள்.
நக்சலைட் தலைவர்கள், காட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு, உங்கள் பிள்ளைகளை முன்னால் நிறுத்தி பலி கொடுக்கிறார்கள். அவர்களிடம் பிள்ளைகளை ஒப்படைக்காதீர்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.