விவசாயத் துறையில் சாதனை படைக்க இதுதான் சரியான தருணம்: இளைஞர் தின விழாவில் ஓ.பி.எஸ் பேச்சு

விவசாயத்துறையில் மிகப்பெரும் சாதனை படைக்க, இதுதான் சரியான தருணம் என்ற விழிப்புணர்வை நமது இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என சென்னையில் நடந்த தேசிய இளைஞர் தின விழாவில் ஓ.பி.எஸ் பேசினார். #agriculture
விவசாயத் துறையில் சாதனை படைக்க இதுதான் சரியான தருணம்:  இளைஞர் தின விழாவில் ஓ.பி.எஸ் பேச்சு
Published on

சென்னை:

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இளைஞர் சங்கம் சார்பில் சென்னையில் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது. விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

20 ஆம் நூற்றாண்டில் வேளாண்மைத் தொழில் மிக்க வளர்ச்சி அடைந்து, உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவை அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக உணவு உற்பத்தி பன்மடங்கு பெருகியது. ஆனால், பூச்சிக் கொல்லிகளையும், செயற்கை உரங்களையும் அதிகப்படியாக பயன்படுத்துவது நிலத்தின் நீண்டகால செழுமையை பாதிக்கும் என்பது மட்டுமல்ல மக்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்ற விழிப்புணர்வை மக்கள் தற்போது பெற்றுள்ளார்கள். இதன் காரணமாக சுற்றுசூழல் விழிப்புணர்வு வளர்ந்து, விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஆட்சியாளர்கள் இயற்கையோடு இசைந்த வேளாண்மை முறைக்கு தற்போது ஆதரவளிக்க துவங்கியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில், 8 சதவீத விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புள்ளி விவரம் எடுத்துக் கூறுகிறது. இதன் காரணமாகவும், மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், நாட்டில் விளைபொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனால், வேளாண்மைத்துறையில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. இப்படி வேலைக்கு உத்தரவாதம் தருவதாகவும், பெருமளவு வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடியதாகவும் வேளாண்மைத்துறை மாறி வருகிறது. இதனை மனதில் கொண்டு இளைய சமுதாயத்தின் பார்வை தற்போது வேளாண்மைத்துறையை நோக்கி திரும்பி இருக்கிறது.

இதனை சரியானபடி பயன்படுத்தி, அவர்களுக்கு சரியான வழியை காட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த கடமையையும், பொறுப்பையும் நிறைவேற்றுவதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, தனது சிறப்பான பங்களிப்பை நல்கி வருகிறது.

வேளாண் துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள், 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை மிகவும் சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறார். அவரது வழிகாட்டுதலின்படி, செயல்பட்டு வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இளைஞர்களுக்கு, ஆண், பெண் விவசாயிகளுக்கு, விவசாயத்துறையில் எல்லாவிதமான ஆலோசனைகளையும் வழங்கி, பல பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வருகிறது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 120 கோடியில், 70 சதவீதம் பேர், 35 வயதுக்கு கீழே உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதனால், இந்தியாவை “இளைஞர்கள் பூமி” என்று அழைக்கிறார்கள். இந்த இளைஞர் பூமியை, ஏழை, எளியோர் வாழ்ந்திட உகந்த பூமியாக ஆக்க, தமிழகத்தை இளைஞர்களின் எதிர்கால சொர்க்க பூமியாக மாற்ற, ஒரே வழி, விவசாயத்துறையில் மிகப்பெரும் சாதனை படைக்க, இதுதான் சரியான தருணம் என்ற விழிப்புணர்வை நமது இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது, வேளாண்மை மேம்பாட்டு இலக்கை எய்திட, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில்,  எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன், நபார்டு வங்கியின் சென்னை தலைமை பொது மேலாளர் நாகூர் ஜின்னா, தமிழ்நாடு இளைஞர் சங்க தலைவர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். #agriculture #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com