

திருவனந்தபுரத்தில் மிகவும் பழமையும், பிரசித்தியும் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்த நிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் ரகசிய நிலவறைகள் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நிலவறைகளில் விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்கள் இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அங்குள்ள நிலவறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள தங்க, வைர நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இந்த பணிகளை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு தனது பிரதிநிதியாக வக்கீல் கோபால் சுப்பிரமணியம் என்பரையும் நியமித்தது. அவரது முன்னிலையில் இந்த கணக்கெடுப்பு நடந்தது. அப்போது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த பொக்கிஷ அறைகளை பல முறை திறந்து அதில் இருந்த நகைகளை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலின் நிர்வாகத்தை அரசு அதிகாரியிடம் ஒப்படைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பத்மநாபசுவாமி கோவிலில் ‘ஏ’ முதல் ‘எப்’ வரை 6 ரகசிய நிலவறைகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய அறையான ‘பி’ நிலவறையைத் தவிர மற்ற அனைத்து அறைகளும் திறக்கப்பட்டு அதில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. ‘பி’ நிலவறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறை மட்டும் திறக்கப்படவில்லை.
இதற்கிடையில் பி நிலவறை இதற்கு முன்பு பல முறை திறக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே மீண்டும் அந்த நிலவறையை திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்று வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி பி ரகசிய நிலவறையை திறக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து வக்கீல் கோபால் சுப்பிரமணியம் நேற்று திருவனந்தபுரம் வந்தார். முதலில் அவர் பத்மநாபசுவாமி கோவில் நிர்வாக அதிகாரி ரதீசனிடம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள கபடியார் அரண்மனைக்குச் சென்ற அவர் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரை சந்தித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக பி நிலவறையை திறப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரை சுப்ரீம் கோர்ட்டு பிரதிநிதி வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சந்தித்து ஆலோசனை நடத்திய காட்சி.
அப்போது மன்னர் குடும்பத்தினர் பி நிலவறையை திறப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐதீகங்களை மீறி அந்த ரகசிய நிலவறையை திறந்தால் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள்.
மேலும் தற்போது ராஜகுடும்பம் கட்டுப்பாட்டில் பத்மநாபசுவாமி கோவில் இல்லாததால் பத்மநாபசுவாமி கோவிலின் தந்திரியின் முடிவு தான் இதில் முக்கியமானது.
பத்மநாபசுவாமி கோவிலை பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் தந்திரி தேவ பிரசன்னம் பார்த்து இறுதி முடிவு எடுப்பார். எனவே தந்திரியின் முடிவை அறிந்து செயல்பட வேண்டும். அதே சமயம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய நிலவறையை திறக்க கூடாது என்பது தான் எங்கள் குடும்பத்தின் முடிவு என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் ரகசிய நிலவறையை திறப்பதில் இறுதி முடிவு இன்னும் ஏற்படவில்லை.