திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

திருவெண்ணைநல்லூர் அருகே அடிக்கடி தடம் எண் மாற்றி வருவதை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
Published on

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது மாரங்கியூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து சேத்தூர், பையூர், திருமதுரை உள்ளிட்ட 10 கிராமங்களின் வழியாக மாரங்கியூருக்கு தினமும் காலை 7.30 மணிக்கு அரசு டவுன்பஸ் வந்து பின்னர் 10 நிமிடங்கள் கழித்து விழுப்புரத்துக்கு செல்லும். இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த சிலநாட்களாக இந்த அரசு பஸ் மாரங்கியூருக்கு காலை 7.30 மணிக்கு வராமல் ஒவ்வொரு நாளும் வேறு வேறு நேரங்களில் வந்து செல்கிறது. மேலும் அடிக்கடி தடம் எண்ணை மாற்றிக்கொண்டு வருகிறது. இதனால் இந்த பஸ்சை நம்பி இருக்கும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாரங்கியூர் மாணவ-மாணவிகள் இன்று காலை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் திரண்டனர்.

அப்போது விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன்பஸ் 6.30 மணிக்கு வந்தது. அந்த பஸ்சை செல்லவிடாமல் அதனை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பஸ்சை தினமும் ஒரே நேரத்தில் இயக்க வேண்டும், தடம் எண்ணை மாற்றக்கூடாது என கோ‌ஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை விடுவித்தனர். இதையடுத்து அந்த பஸ்சில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com