திருவாரூரில் மோட்டார் சைக்கிள்- அரசு பஸ் மோதல்: பள்ளி மாணவர் பலி

திருவாரூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் பள்ளி மாணவர் இறந்தார். வாலிபர் படுகாயமடைந்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் ராகுல்(வயது16). 12-ம் வகுப்பு மாணவரான இவர் தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள பட்டாசு கடையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பணிக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கடை பூட்டப்பட்ட பின்னர் தனது நண்பரான திருவாரூர் அப்பா பிள்ளை தெருவை சேர்ந்த நிஷாந்த்(21) என்பவருடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ராகுல் சென்றார்.

வாழவாய்க்கால் ரவுண்டானா அருகே இவர்கள் சென்ற போது நாகையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ராகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்புறத்தில் அமர்ந்து இருந்த ராகுல் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளில் ஓட்டி சென்ற நிஷாந்த் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com