திருவனந்தபுரம் அருகே மயக்க மருந்து கொடுத்து சிறுமிகள் கற்பழிப்பு- நடன ஆசிரியர் கைது

திருவனந்தபுரம் அருகே மயக்க மருந்து கொடுத்து பல சிறுமிகளை கற்பழித்த நடன ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல்
ராகுல்
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 19).

இவர் அந்த பகுதியில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இங்கு நவீன நடனப்பயிற்சி அளித்து வந்தார். இவரது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் ஏராளமான வாலிபர்களும், இளம் பெண்களும் இந்த நடனப் பள்ளியில் இணைந்து நடனம் கற்றனர். பல சிறுமிகளும் இவரிடம் நடனம் பயின்று வந்தனர்.

ராகுலிடம் நடனம் கற்று வந்த கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் நடனப்பள்ளிக்கு சென்றபோது மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி நடனப்பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் ராகுல் அந்த சிறுமி நடனம் கற்க வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். அந்த சிறுமிபற்றி எந்த தகவலும் கிடைக்காததால் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். மேலும் போலீசார் நடனப்பள்ளிக்கு சென்று ராகுலிடம் விசாரணை நடத்தினார்கள். அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

அப்போது அந்த நடனப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அதுபற்றி ராகுலிடம் விசாரித்த போது அந்த சிறுமிக்கு அவர் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து ராகுலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அந்த சிறுமியை போல மேலும் பல சிறுமிகளை அவர் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com