

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளுக்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 46). இவர் திருத்துறைப்பூண்டியில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்துவதாகவும், அதற்கான பொருட்களை எடுத்து செல்ல திருத்துறைப்பூண்டி அரியலூர் ரோட்டை சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்தார்.
அதேபோல வெள்ளி கிடங்கை சேர்ந்த அருள்மொழி, வேதாரண்யத்தை சேர்ந்த செந்தில், மருதூரை சேர்ந்த மாரிமுத்து, உதயதேவன்காட்டையை சேர்ந்த சுதாகர், திருவாரூரை சேர்ந்த முருகதாஸ் ஆகியோரிடம் இருந்து 4 சரக்கு ஆட்டோக்களையும், 2 கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் சண்முகவேலிடம் இருந்து வாடகை சரியாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஜெகதீசன், சண்முகவேலுவிடம் விசாரித்தார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெகதீசன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் சண்முகவேலுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சரக்கு ஆட்டோக்கள் மற்றும் கார்களை அடகு வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலுவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த வாகனங்களை மீட்டனர். #tamilnews