ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர் அறிக்கை

ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரூ.1000 கோடி தார் கொள்முதல் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர் அறிக்கை
Published on

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக நெடுஞ்சாலைத் துறையால் மொத்தம் 57,043 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளை அமைக்க, பராமரிக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து தார் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட தாரின் விலை சந்தை நிலவரத்திற்கேற்ப மாதாமாதம் மாறுபடுகிறது.

இதை அடிப்படையாக வைத்து தார் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் இருக்கும் சாதகமான அம்சங்களை பயன்படுத்தி நெடுஞ்சாலைத் துறையில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறையை நியமிக்கக் கோரி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 2014 இல் ஒப்பந்தக்காரரிடம் பணி ஒப்படைக்கப்பட்ட போது தார் விலை ஒரு டன் ரூபாய் 41 ஆயிரத்து 360 ஆக இருந்தது. அதே தாரின் விலை மார்ச் 2015 இல் பணி நிறைவடைகிறபோது ரூபாய் 30 ஆயிரத்து 260 ஆக குறைந்திருந்தது. அதேபோல, செப்டம்பர் 2015 இல் ஒரு டன் தாரின் விலை ரூபாய் 31 ஆயிரத்து 100 ஆக இருந்தது. அதே தாரின் விலை பணி நிறைவடைந்த மார்ச் 2016 இல் ரூபாய் 23 ஆயிரத்து 146 ஆக குறைந்தது.

இதில் வித்தியாசமாக உள்ள தொகையை ஒப்பந்தக்காரரிடமிருந்து நெடுஞ்சாலைத்துறை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் ஒப்பந்தக்காரரும், அதிகாரிகளும் சேர்ந்து ஊழல் செய்திருக்கிறார்கள்.

ஒப்பந்தக்காரர்களோடு நெடுஞ்சாலைத் துறையினர் சேர்ந்து கொண்டு ஆயிரம் கோடிக்கும் மேலாக 2014-15, 2015-16 ஆகிய ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஊழலைப் போல, பாதாள சாக்கடை ஊழல், லேப்டாப் கொள்முதல் ஊழல், டாஸ்மாக் ஊழல் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. அ.தி.மு.க. ஒரு ஊழல் கட்சி. அ.தி.மு.க. நடத்துவது ஒரு ஊழல் ஆட்சி.

இந்த ஊழல் ஆட்சியை தக்க வைக்க எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செய்கிற பல்வேறு முயற்சிகளுக்கு பா.ஜ.க. துணையாக இருந்து பாதுகாத்து வருகிறது. மடியில் கனம் இருப்பதால் தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் மத்திய பா.ஜ.க. தலைமைக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். பெரும்பான்மையை இழந்து குதிரை பேரம் நடத்தி ஆளுநர் ஆதரவோடு பெரும் பான்மை இழந்த அரசை நீண்டநாள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு எவ்வளவு நாள் நீடிக்கிறதோ, ஒவ்வொரு நாளும் இதைப் போன்ற ஊழல் செய்வதில் தான் அக்கறை காட்டுவார்களே தவிர, மக்கள் நலனில் அக்கறை காட்டப் போவதில்லை.

எனவே, நெடுஞ்சாலைத் துறையில் தார் கொள்முதல் செய்ததில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்த ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறையை நியமிக்க வேண்டுமென பொதுநல வழக்கில் கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வலியுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com