தற்காலிக ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்- திருநாவுக்கரசர்

10 வருடமாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
Published on

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10 ஆண்டாக பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ திட்ட வேலையில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 2011-ம் ஆண்டு பிறப்பித்த ஆணையின்படி பணியமர்த்தப்பட்டனர்.

பகுதி நேரமாக இருந்தாலும் கூட ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது தங்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் அதன்பின் 10வது கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்த 10 ஆண்டுகளில் அரசு வேலையை நம்பி வந்த 16,549 பகுதி நேர ஆசிரியர்களில் மரணம், 58வயதாகி பணி ஓய்வு போக தற்போது மீதமுள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர். ரூ.5000 சம்பளத்தில் பணி அமர்த்தப்பட்ட இவர்களுக்கு சம்பள உயர்வு முதல் முறையாக 2014ம் ஆண்டு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. கடைசியாக 2017ம் ஆண்டு 700 ரூபாய் உயர்த்தி தரப்பட்டது.

10 ஆண்டுகளில் 2 முறை சம்பள உயர்வோடு இந்த குறைந்த சம்பளமான 7700 ரூபாயை வைத்துக் கொண்டு வி‌ஷம் போல ஏறிவரும் விலைவாசி உயர்வை எதிர் கொள்ள முடியாமல் வறுமையில் வாடும் ஆசிரியர்களின் குடும்பத்தின் நிலையை அரசு உணர வேண்டும். ஆந்திராவில் ரூ.14000, அந்தமானில் ரூ.21000, கோவாவில் ரூ.22000 சம்பளம் இதே பகுதி நேர ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. கர்நாடகா, கேரளா சண்டிகர், மாநிலங்களில் ரூ.10000 தரப்படுகிறது

கடந்த 2017ம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு செய்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இதுநாள்வரை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது 12544 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆண்டுக்கு சுமார் 100 கோடி செலவாகிறது.

10 சதவிகித ஊதிய உயர்வு 9 வருடமே மாதம் சம்பளம் மற்றும் போனஸ் போன்ற நீண்டகால நிலுவை நிதியை கணக்கிட்டால், பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு நிதி செலவு ஏற்படாது. சிறப்பாசிரியர்கள் நிலையில் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த மேலும் 200 கோடி நிதி ஒதுக்கினால்; போதுமானது. எனவே பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com