பேஸ்புக் மூலம் 100 பெண்களை ஏமாற்றி சீரழிப்பு: திருநாவுக்கரசிடம் சிக்கிய ஆபாச புகைப்படங்கள் - வீடியோ

பேஸ்புக் மூலம் பழகி 100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு.
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு.
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி நகை மற்றும் பணம் பறித்த வழக்கில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதிஷ், வசந்த குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான பைனான்சியர் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தார். கைதானவர்களிடம் விசாரித்த போது சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை தனியாக அழைத்து ஆபாச படம் எடுத்து டார்ச்சர் கொடுத்ததும், பணம் பறித்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். திருப்பதியில் பதுங்கி இருந்த அவர் நேற்று பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதான திருநாவுக்கரசிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பல ஆபாச வீடியோக்கள், நூற்றுக்கணக்கான புகைப்படங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த வீடியோக்களை வைத்து இவர்கள் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கைதான திருநாவுக்கரசு போலீசில் கூறும் போது சேலத்தை சேர்ந்த பெண் தோழி ஒருவர் தான் திருப்பதியில் பதுங்கி இருக்குமாறு கூறினார். அதன்படி தான் அங்கு மடத்தில் தங்கி இருந்ததாக கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது-

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்தேன். அப்போது எனக்கு கல்லூரியில் நிறைய மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். இதே போல் இளம் பெண்களின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களை ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்தினேன்.

பின்னர் அந்த பெண்களிடம் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களான சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோரும் உல்லாசமாக இருந்தார்கள். கடைசியாக ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தோம். அவர் கொடுத்த புகாரால் போலீசில் சிக்கி கொண்டோம்.

போலீசார் என்னை தேடுவது தெரிந்ததும் கோவையில் இருந்து சேலத்திற்கு சென்றேன். அங்கிருந்த பெண் தோழி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பதியில் தங்கி இருந்தேன். இந்த நிலையில் பயத்திலும் பாதுகாப்பிற்கும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டேன். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை.

திருப்பதியில் இருந்து சேலம் வந்து அங்கிருந்து ஈரோட்டிற்கு பஸ்சில் வந்தேன். பின்னர் வாடகை காரில் மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்த போது போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான திருநாவுக்கரசை பொள்ளாச்சி ஜே.எம். எண்.1 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருநாவுக்கரசு மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அவர்களது நண்பர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது பொள்ளாச்சி டி.எஸ்.பி. ஜெயராமன் கூறியதாவது-

திருநாவுக்கரசு உட்பட ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் பல ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி நகையும் பறித்துள்ளனர்.

4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசு கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி டி.எஸ்.பி. அலுவலகம், கிழக்கு போலீஸ் நிலையம் முன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

திருநாவுக்கரசுக்கு சொந்தமான வீடு ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் ஊருக்கு மத்தியில் அமைந்து உள்ளது. அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருநாவுக்கரசு குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி மாக்கினாம்பட்டி வந்து விட்டனர்.

இதனால் சின்னம்பம்பாளையத்தில் உள்ள வீட்டை தனக்கும் தனது நண்பர்களுக்கும் உல்லாச விடுதியாக திருநாவுக்கரசு மாற்றி உள்ளார். இங்கு வைத்து தான் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்தது தெரிய வந்து உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com