

மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் குருமுனிஸ்வரன் (வயது 36), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி ரதி தேவி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹர்ஷவர்தன் (5), ஹர்சவர்த்தினி (5) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
குருமுனீஸ்வரன் சென்னையில் கட்டிட காண்டிராக்டராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ராமநாதபுரத்தில் இருந்து ரதிதேவி காரியாபட்டி அருகே உள்ள தனது பெற்றோர் வசிக்கும் சிக்கனேந்தல் கிராமத்துக்கு வந்து விட்டார்.
இரு குழந்தைகளுடன் வசித்து வந்த ரதிதேவி சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
இதனிடையே குருமுனீஸ்வரன் சென்னையில் இருந்து ராமநாதபுரத்துக்கு வந்து ரதிதேவி குறித்து தனது பெற்றோருடன் விசாரித்துள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த குருமுனீஸ்வரனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பெற்றோர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் பிரிந்த துயரத்தில் குருமுனீஸ்வரன் அதிக விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் நேற்று மதியம் ஹெல்மெட்டுடன் ரதிதேவி பணியில் இருந்த பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரதி தேவியை சரமாரியாக குத்திக்கொலை செய்து விட்டார் குருமுனீஸ்வரன்.
வகுப்பறையில் 50-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது வெறிப்பிடித்தவர் போல குருமுனீஸ்வரன் கத்தியபடி உங்கள் ஆசிரியையை நான் கொல்ல வேண்டும் என்று கூறியபடி கத்தியால் குத்தியது மாணவர்கள் மனதில் நீங்கா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரு முனீஸ்வரன் போலீசில் சரண் அடைந்து விட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடந்த சம்பவங்கள் குறித்து மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பதிலளித்துள்ளார்.
எனவே ‘சைக்கோ’ போல குருமுனீஸ்வரன் காணப்படுகிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மனைவி ரதிதேவியும், குழந்தைகளும் என்னை விட்டு பிரிந்ததால் தான் ரதிதேவியை கொலை செய்ததாக கூறும் குரு முனீஸ்வரன் மற்ற கேள்விகளுக்கு பதில் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார்.
இதனால் கொலைக்கான முழு காரணம் குறித்து போலீசார், அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியை ரதிதேவி கொலை தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் குருமுனீஸ்வரனை கைது செய்ததுடன் அவரது தந்தை கணேசன், தாயார் பஞ்சு, குரு முனீஸ்வரனின் சகோதரிகள் செல்வி, தனலட்சுமி மற்றும் சிவராஜ், செல்வமணி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளியில் நடந்த கொலை சம்பவத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பதட்டத்தை தணிக்கும் வகையில் இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.