

சென்னை:
சென்னை திருமங்கலம் நேரு நகர் 2-வது அவென்யூவில் ஏ.கே.எஸ். ஜூவல்லரி என்ற பெயரில் 3 மாடிகளை கொண்ட நகை கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்தனர். அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக ஏறி நகை கடையின் மாடிக்கு சென்ற கொள்ளை கும்பல் அங்கிருந்த பெரிய இரும்பு கிரில் கேட்டை உடைத்தது.
முதலில் சுவரை உடைத்து பின்னர் கிரில் கேட்டை அப்படியே பெயர்த்து எடுத்த கொள்ளையர்கள் அதன் வழியாக கடைக்குள் சென்றனர்.
பின்னர் கடையினுள் பொறுமையாக அமர்ந்து பொருட்களை கொள்ளையடித்தனர்.
ஏ.கே.எஸ்.ஜூவல்லரி நகைக்கடையின் கீழ் தளத்தில் தங்க நகைகள் உள்ளன. முதல் மாடியில் வெள்ளிப் பொருட்களும், 2-வது மாடியில் ராசிக்கல் பதித்த நகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. 3-வது மாடியில் கடைகளுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தனர். கடையில் புகுந்த கொள்ளையர்கள் நகைகள் அனைத்தையும் மொத்தமாக சுருட்டிச் சென்றனர்.
மொத்தம் 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 3 கோடி. கடையில் இருந்த ரூ. 7 லட்சம் பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கூடுதல் கமிஷனர் ஜெயராம், அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட் டையை தொடங்கி உள்ளனர்.
கொளத்தூரை அடுத்த ரெட்டேரியில் மஹாலட்சுமி ஜூவல்லரி என்ற நகைக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று 3 ½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தப்பி ஓடிய அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.
அப்போதுதான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் துப்பாக்கி சூட்டில் பலியானார். அதன் பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பிறகே ராஜஸ்தான் போலீசாரின் உதவியுடன் கொள்ளையன் நாதுராமும், அவனது கூட்டாளிகளும் பிடிபட்டனர். தற்போது அவர்கள் புழல் சிறையில் உள்ளனர்.
கொளத்தூர் கொள்ளை சம்பவம் பரபரப்பு சற்று அடங்கி இருந்த நிலையில் திருமங்கலத்தில் மேலும் ஒரு நகை கடையில் அதே பாணியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
கொளத்தூரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய நகைக்கடை ராஜமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாகும். இது அண்ணா நகர் போலீஸ் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. அதே அண்ணாநகர் போலீஸ் மாவட்ட எல்லைக் குட்பட்ட திருமங்கலத்திலேயே கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை துணிச்சலுடன் காட்டி உள்ளனர். இது போலீசாருக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.