திருமங்கலம் அருகே விபத்து- கல்லூரி மாணவர் பலி

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமங்கலம் அருகே விபத்து- கல்லூரி மாணவர் பலி
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் அருண் (வயது 19). இவர் திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இரவு அருண், தனது நண்பர்கள் ராம் குமார் (22), காளிமுத்து (22) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் சென்றார்.

அப்போது நெடுங்குளத்தில் இருந்து உலகாணி நோக்கி மணல் லாரி வந்தது. அந்த லாரி நெடுங்குளம் விலக்கில், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் அருண் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அருண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

ராம்குமார், காளி முத்து ஆகியோர் காயத்துடன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் கோபால் (59) விவசாயி. இவர், டி.கல்லுப்பட்டி- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோபால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com