

போரூர்:
திருமங்கலம், 3-வது பிரதான சாலையில் உள்ள நகை கடையில் கடந்த 6-ந்தேதி 9 கிலோ தங்க நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது.
இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ஜான்பாஸ்கோ, அவரது கூட்டாளிகள் வியாசர்பாடியை சேர்ந்த தேவராஜ் என்கிற கத்திகுத்து தேவராஜ், ஆகாஷ் என்கிற ராஜ்குமார், அவரது உறவினர் மைதூர்ஷேக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட ஜான்பாஸ்கோ போலீசில் கூறும்போது, நான் திருமங்கலம் பகுதியில் தங்கி இருந்த போது பெண் ஒருவரை காதலித்து வந்தேன். திருமணத்திற்காக நகை, புதுப்புடவைகள் கொள்ளையடித்த பணத்தில் வாங்கி வைத்திருந்தேன்.
நான் குற்றச்செயலில் ஈடுபடுவது தெரிந்ததும் அவர் கண்டித்தார். ஒருமுறை என்னை ஜாமீனில் எடுத்தார். அதன் பின்னரும் நான் குற்றச்செயலில் ஈடுபட்டதால் காதலி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டேன்’’ என்றார்.
ஜான்பாஸ்கோவின் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த புதுப் புடவைகள், நகைகளை கைப்பற்றினர்.
கொள்ளை வழக்கு ஒன்றில் ஜான்பாஸ்கோ கைதாகி புழல் சிறையில் இருந்த போது மற்றொரு வழக்கில் கைதாகி அதே சிறையில் இருந்த தேவராஜுடன் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் சிறையில் இருந்து கொண்டே நகை கடையில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர். முதலில் சிறையில் இருந்து வெளியே வந்த தேவராஜ் ஜான்பாஸ்கோவை கடந்த 1-ந்தேதி அன்று ஜாமினில் எடுத்தார்.
பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி நகை கடையில் மேல் தளம் வழியாக சென்று கதவை உடைத்து நகைகள் மற்றும் லாக்கரில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
நகை கடையில் பதிவான கைரேகையை வைத்து முதலில் ஜான்பாஸ்கோவை போலீசார் பிடித்தனர். பின்னர் அவன் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். #Tamilnews