

திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி(வயது 46). இவர் தனது மகள் தனம்(15), மகன் சமயன்(8) ஆகியோருடன் கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வீடு புகுந்த மர்மமனிதர்கள் ஆராயி, தனம், சமயன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு சென்று விட்டனர். இந்தசம்பவத்தில் சமயன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தான்.
ஆராயி, மகள் தனம் ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தசம்பவம் தொடர்பாக அரகண்ட நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் மறியல் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் ஒரு தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற வெள்ளம்புத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் வெளிமாநில வாலிபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதன்பேரில் வெள்ளம்புத்தூர் கிராமத்தின் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு வந்த வெளிமாநில வாலிபர்கள் 4 பேர் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுபோன்ற சம்பவங்கள் இதே கிராமத்தில் ஏற்கனவே 2 முறை நடந்துள்ளது. அதேபோன்று இப்போதும் நடந்துள்ளதால் இந்த சம்பவத்தில் வெள்ளம் புத்தூரில் தங்கியிருந்தவர் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து போலீசார் வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சம்பவம் நடந்த அன்று நாமக்கல்லை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும், சம்பவம் நடந்த மறுநாள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நாமக்கல் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்று 16 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததால் ஆராயி குடும்பத்தினர் மற்றும் இந்த கிராமமக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆராயி, அவரது மகள் தனம் ஆகியோர் தொடர்ந்து மயங்கிய நிலையிலே உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுமி தனம் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நடந்து பல நாட்கள் ஆகியும் அதன் அறிக்கையை இன்னும் வெளியிடப்படவில்லை.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி தனத்தின் தலையில் உள்பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கோமாநிலையில் இருப்பதால் அவர் நேற்று திடீரென்று சிறப்பு சிகிச்சை பிரிவில் உள்ள நரம்பியல் வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கும் தனத்தின் நிலைமை மோசமாகவே உள்ளது.
இதுபற்றி ஆராயி மகன் சரத்குமார் கூறியபோது,
என் தாய்க்கும், தங்கைக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்பத்திரியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எப்படி நாங்கள் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோமோ அதே நிலையில் கடந்த 15 நாட்களாக உள்ளனர் என்று வேதனையுடன் கூறினார். #tamilnews