திருக்கோவிலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் கதவை உடைத்து ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை

திருக்கோவிலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் செவலை ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 57). இவரது மனைவி ராஜராஜேஸ்வரி(45).

கார்த்திகேயன் திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ராஜராஜேஸ்வரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி ராஜராஜேஸ்வரியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மர்மமனிதர்கள் சிலர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். பின்பு அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை ஒரு பையில் அள்ளிப்போட்டுக் கொண்டனர்.

அதேபோல் 2 கிலோ வெள்ளி பொருட்களையும், ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள். கார்த்திகேயன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சென்னைக்கு சென்றிருக்கும் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருக்கோவிலூர் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணாபாலன், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்தகொள்ளையில் துப்புதுலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது.

அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மமனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com