திருபுவனையில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

திருபுவனையில் கடன் தொல்லையால் வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனையில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
Published on

திருபுவனை:

பண்ருட்டி அருகே ஏனாதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது34). இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த ஒரு வருடமாக திருபுவனை பாளையம் சாந்திநகரில் குடும்பத்தோடு தங்கி திருபுவனை மெயின் ரோட்டில் ஸ்வீட் கடை நடத்தி வந்தார்.

இதற்கிடையே உதயகுமார் பலரிடம் கடன் வாங்கி ஸ்வீட்கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறாததால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுக்க இயலாமல் அல்லாடி வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு உதயகுமாருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதனால் உதயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஸ்வீட் கடையில் இருந்த உதயகுமார் மனைவி சத்யாவிடம் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாக உதயகுமார் கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சத்யா வீட்டுக்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் கணவர் மயங்கி கிடப்பதை கண்டு சத்யா அதிர்ச்சி அடைந்தார். அருகில் வி‌ஷபாட்டில் கிடந்தது. கணவர் வி‌ஷம் குடித்து இருப்பதை அறிந்த சத்யா உடனடியாக அவரை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உதயகுமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com