

கேப் டவுன்:
தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.
தவான் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் - கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. அதன்பின் களமிறங்கிய ரகானே 11 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து கோலியுடன், டோனி இணைந்தார். சிறப்பாக விளையாடிய கோலி 119 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரின் 34-வது சதமாகும். மேலும் இந்திய கேப்டன்களாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறினார்.
டோனி 10 ரன்களிலும், அவரை தொடர்ந்து கேதார் ஜாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணி 42.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கோலியுடன், புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாட, கோலி அதிரடியில் இறங்கினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. கோலி 160 ரன்கள் (159 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்ஸர்), புவனேஷ்வர் குமார் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில், டுமினி 2 விக்கெட்களும், மோரிஸ், தாகிர், ரபாடா, பெஹலுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் தென்ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 304 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. #INDvsSA #ThirdODI